Friday, 25 August 2017

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

1.ஊஞ்சல்.
1.ஆரண்யகமும் ஆகமமும் தூண்களாக, அறியமுடியாத சிவஞானம் அதன் விட்டமாக, அழகிய நால்வேதமும் கயிறாக, சிறப்புமிகுந்த உபநிடதம் பலகையாக, பேரழகு கொண்ட ப்ரணவமே பீடமாக அமைந்திருக்கும் நல்லூஞ்சலின் மேல் இனிதாக அமர்ந்திருக்கும், கார்மேகங்கள் முட்டும் அளவு கோபுரங்கள் அமைந்திருக்கும் நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

2.சிரசில் இருக்கும் மணிமகுடம் இருளை அடியோடு விரட்ட தேவர் சொரியும் பூக்கள் திசைகளை மூட, அதிர்வோடு ஒலிக்கும் வாத்தியங்கள் ஆர்ப்பரிக்க, வேதமுணர்ந்தோர் கூறும் வேத ஒலி விண்ணையும் மண்ணையும் பிளக்க, மின்னல் இடை கொண்ட சித்தியும் புத்தி என்று கூறக்கூடிய இரு சக்திகளும் மடியில் பாங்காய் அமர்ந்திருக்க கரும்பு வயல் சூழ்ந்திருக்கும் நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.



3.உமையவளோடு மந்தாகினிக்கும் மகனாகி, மூன்றுவித உருவங்காட்டிய ( உருவாய் அருவாய் உளதாயிலதாய் ) பிறப்பு இறப்பு அற்ற பரிபூரணமான பொருளே என்பேனா, (விலங்கு மனிதன்) என இரு திணையிலும் வடிவெடுத்தவர் என்பேனா, தேவர்கள் அனைவரைப்போலும் நின்றீரென்பேனா, என்ன சொல்வேன் உங்கள் திருவிளையாடலை. விவசாயம் செழிக்கும் கமலைக் கிணறுகள் நிரம்பிய நல்லை என்னும் நகரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

4.இந்த மிகப் பெரிய உலகும் பல்வேறு ஆயிரக்கணக்கான உயிர்களும் உம் கரத்துக்குள்ளே இருப்பதை மோதகக்கரத்தால் காட்டுவித்து, தாவிச்செல்லும் மூஞ்சூறை வாகனமாகக் கொண்டு தீமை உண்டாக்கும் ஆணவச்செயலை அடக்குவதைக் காண்பித்து, தேவலோகத்தை ஒத்த நல்லை நகரின் மீது சிங்கையை ஆண்ட யாரிய மகராசனால் கட்டப்பட்ட திருக்கோயிலில்  வாசம் செய்யும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

5.திருமாலையும் தேவர்களையும் பெரிதும் வாட்டி கொடுமைகள் புரிந்த கயமுகனை அழித்து புகழ் பெறும் பொன்னுலகத்தை அவர்களுக்குத் திரும்ப அளித்து, உன்னைச் சிந்திப்போர்க்குத் தொல்லைகளெல்லாம் தீர விரட்டி, அவர்களுக்கு நல்லவையே பாங்காக நடக்கச் செய்து வண்டுகள் சுற்றும் நீளக் கொன்றை மாலையை முடியில் அணிந்து உலகத்தோர் புகழும் நல்லை நகரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

6. பூச்சொரியும் உன் கோயில் நந்தவனத்தை ஆர்வத்தோடு அமைப்பவர் வாழ, பூக்குமுன்னே அலர் பருவத்தில் மலர் பறித்துத் தொடுத்து உன் கோயில் பணிக்காக அளிப்போர் வாழ, அப்பூக்களை மலரச்செய்ய நீரளிக்கும் குளம் கேணி ஆகியவற்றை அமைப்போர் வாழ, உன் புராணம் முதலியவற்றைப் படிப்போர் கேட்போர் வாழ, உன் கோயிலில் சேவை , பூசை, செய்து திருவிழாக் கொண்டாடுவோர் வாழ, நின் கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்வோர் வாழ யாரிய மகராசன் என்னும் காவலன் கட்டியகோயில் உள்ள ஊரும்  ஆறுமுக நாவலர் பிறந்த ஊருமான நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.



7. அடியவரின் துயர் களைபவரே ஆடுக ஊஞ்சல், ஹரியின் சாபம் தவிர்த்தவரே ஆடுக ஊஞ்சல். வடிவு, குணம் என்னும் பேதம் கடந்தவரே ஆடுக ஊஞ்சல், இம்மண்ணுலகம் உருவாகக் காரணரே ஆடுக ஊஞ்சல், பெரிய ஒற்றைக் கொம்பு உடையவரே ஆடுக ஊஞ்சல், எல்லாத் துன்பத்தையும் களைபவரே ஆடுக ஊஞ்சல். அழகாய் அமைந்த நந்தவனங்கள் சூழ்ந்த நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

8. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோருக்கு முன்னவரே ஆடுக ஊஞ்சல். ஆறுமுகன் என்னும் தம்பிக்கு முன்னவரே ஆடுக ஊஞ்சல், வலிமையான மனம் உடையோருக்கு இனியவரே ஆடுக ஊஞ்சல், வலவை என்னும் ஊரில் வாழும் ஈசனுக்கு இனியவரே ஆடுக ஊஞ்சல், உமை என்னும் பெண்ணின் பாலகரே ஆடுக ஊஞ்சல், வேதகணங்களுக்கு அதிபதியாக விளங்குபவரே ஆடுக ஊஞ்சல், தாமரைத் தடாகங்கள் நிறைந்த நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல்.
வாழி.

சந்தத்தோடு முறைப்படி வேதத்தை ஓதும் அந்தணர்கள் வாழ்க, அமுதசுரபியாய் அள்ளித்தரும் மேகம் போன்ற வள்ளல்கள் வாழ்க, விந்தை மிகும் வண்ணம் இக்கோயிலை அமைத்த யாரிய மகராசனின் செங்கோலும் வாழ்க. மெல்லிய இயல்புடைய பெண்களின் கற்புத்தன்மையோடு தர்மமும் தழைத்தோங்கட்டும். ஐந்தெழுத்தோடு உய்யும் அனுபூதி வாழ்க. ஒவ்வொரு நாளும் சைவநெறி தழைத்து வாழ்க. தாமரை மலர்கள் பொழியும் நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் — with Chitra Kannan.

No comments:

Post a Comment