Monday, 28 August 2017

சரணம் சரணம் கோவிந்தா........




                              சரணம் சரணம் கோவிந்தா........




                                                    பல்லவி

                                   சரணம் சரணம் கோவிந்தா சரணம்
                                   மரணம் பிறப்பெனும் மாயையகலவே
   
                                                   அனுபல்லவி

                                   அரனயனிந்திரன் சுகசனகாதியர்
                                   நரர்சுரர் நாரதர் பணிந்தேத்தும் கேசவனே

                                                       சரணம்

                                   மரவுரி தரித்து கானகம் சென்றவனே
                                   அரக்கரின் குலமழித்து அகிலம் காப்பவனே
                                   அரவணைதனிலுறங்கும் பாற்கடல் வாசனே
                                   குரங்குக்கொடியோனுக்கு கீதையை உரைத்தவனே
                     
                                   கரிக்கும் காரிகைக்கும் அபயம் தந்த மாதவனே
                                   வரம் தரும் கரமும் அபயகரமும் காட்டும்                    
                                    அரவிந்த பதத்தானே அரிநாராயணனே
                                    திருமலையில் நின்றருளும் திருவேங்கடமுடையானே

கண்ணனே......

                                 கண்ணனே......





                                 கண்ணனே உன் நினைவே மனத்தினில் எப்போதும்
                                 பண்ணிசையாய் ஒலிக்கும் வரமருள்வாய்


                                  மண்ணையுண்ட வாயனே மாதவனே கேசவனே
                                  தண்மதி முகத்தோனே தாமரை நாபனே

                                 
                                  கண்கள் உன்னை மட்டுமே காண வேண்டும்
                                  எண்ணமெலாம் உனையே நினைத்திடல் வேண்டும்
                                  நாவிலுன் நாமமே உரைத்திடல் வேண்டும்
                                  காதினில் உன் பெயரே ஒலித்திட வேண்டும்

கதிராமங்கலம் வனதுர்கை

                    கதிராமங்கலம் வனதுர்கை





                                                 பல்லவி

                                கதிராமங்கலம் வனதுர்கையைத் துதித்தேன்
                                கதி நியேயென்று அவள் பதம் பணிந்தேன்

                                              அனுபல்லவி

                                மதிநிதியளித்திடும் கேசவன் சோதரி
                                விதியையும் மாற்றும் அதிசயமானவள்

                                                   சரணம்

                                சதுர்மறை நரர்சுரர் முனிவர்கள் இந்திரன்
                                சதுர்முகனும் சிவனும் போற்றும் ஈச்வரி
                                கதிர்மதியம் போல் முகத்தாள் கார்வண்ணமேனியள்
                                புதுப்பொலிவுடனே எழுந்தருளிக் காட்சிதரும்

Sunday, 27 August 2017

ஶ்ரீகணபதி..........





                                         ஶ்ரீகணபதி..........



                                                 பல்லவி

                                ஶ்ரீகணபதி நீ கனிந்தருள்புரிவாய்
                                பாகம்பிரியாள் உமையவள் மைந்தனே

                                              அனுபல்லவி

                                காகமாய் வந்து காவிரியைத் தந்த
                                ஏகதந்தனே கேசவன் மருகனே

                                                  சரணம்

                                நாகம்தனை இடையில் அணிந்திருக்கும் கரிமுகனே
                                ஆகம வேத புராணங்கள் போற்றும்
                                சேகரன் மகனே ஆனைமுகத்தோனே
                                சோகங்கள் களைந்து சுகமளிப்பவனே

                                சாகசங்கள் செய்து அரக்கனை அழித்தவனே
                                யாகயோகங்கள் அனைத்துக்கும் முதலான
                                மேகநிறம் கொண்ட விக்ன விநாயகனே
                                வாகனமாய் மூஷிகனை வைத்திருப்பவனே

Saturday, 26 August 2017

கணபதி நீயே......

                           கணபதி நீயே......


                                                        பல்லவி

                                     கணபதி நீயே கதியெனத் துதித்தேன்
                                     அணங்குகள் சித்தியும் புத்தியும் பணிந்திடும்

                                                      அனுபல்லவி

                                     வணங்கிடுமடியார்க்கு வரங்களையளித்திடும்
                                     குணநிதியே சென்ன கேசவன் மருகனே

                                                          சரணம்

                                     பிணங்கிய குறமகள் வள்ளியை முருகன்
                                     மணந்திட உதவிய ஆனைமுகத்தோனே
                                     பணம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்
                                     இணையடி நிழலில் இடம் பெற வேண்டியே

Friday, 25 August 2017

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

1.ஊஞ்சல்.
1.ஆரண்யகமும் ஆகமமும் தூண்களாக, அறியமுடியாத சிவஞானம் அதன் விட்டமாக, அழகிய நால்வேதமும் கயிறாக, சிறப்புமிகுந்த உபநிடதம் பலகையாக, பேரழகு கொண்ட ப்ரணவமே பீடமாக அமைந்திருக்கும் நல்லூஞ்சலின் மேல் இனிதாக அமர்ந்திருக்கும், கார்மேகங்கள் முட்டும் அளவு கோபுரங்கள் அமைந்திருக்கும் நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

2.சிரசில் இருக்கும் மணிமகுடம் இருளை அடியோடு விரட்ட தேவர் சொரியும் பூக்கள் திசைகளை மூட, அதிர்வோடு ஒலிக்கும் வாத்தியங்கள் ஆர்ப்பரிக்க, வேதமுணர்ந்தோர் கூறும் வேத ஒலி விண்ணையும் மண்ணையும் பிளக்க, மின்னல் இடை கொண்ட சித்தியும் புத்தி என்று கூறக்கூடிய இரு சக்திகளும் மடியில் பாங்காய் அமர்ந்திருக்க கரும்பு வயல் சூழ்ந்திருக்கும் நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.



3.உமையவளோடு மந்தாகினிக்கும் மகனாகி, மூன்றுவித உருவங்காட்டிய ( உருவாய் அருவாய் உளதாயிலதாய் ) பிறப்பு இறப்பு அற்ற பரிபூரணமான பொருளே என்பேனா, (விலங்கு மனிதன்) என இரு திணையிலும் வடிவெடுத்தவர் என்பேனா, தேவர்கள் அனைவரைப்போலும் நின்றீரென்பேனா, என்ன சொல்வேன் உங்கள் திருவிளையாடலை. விவசாயம் செழிக்கும் கமலைக் கிணறுகள் நிரம்பிய நல்லை என்னும் நகரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

4.இந்த மிகப் பெரிய உலகும் பல்வேறு ஆயிரக்கணக்கான உயிர்களும் உம் கரத்துக்குள்ளே இருப்பதை மோதகக்கரத்தால் காட்டுவித்து, தாவிச்செல்லும் மூஞ்சூறை வாகனமாகக் கொண்டு தீமை உண்டாக்கும் ஆணவச்செயலை அடக்குவதைக் காண்பித்து, தேவலோகத்தை ஒத்த நல்லை நகரின் மீது சிங்கையை ஆண்ட யாரிய மகராசனால் கட்டப்பட்ட திருக்கோயிலில்  வாசம் செய்யும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

5.திருமாலையும் தேவர்களையும் பெரிதும் வாட்டி கொடுமைகள் புரிந்த கயமுகனை அழித்து புகழ் பெறும் பொன்னுலகத்தை அவர்களுக்குத் திரும்ப அளித்து, உன்னைச் சிந்திப்போர்க்குத் தொல்லைகளெல்லாம் தீர விரட்டி, அவர்களுக்கு நல்லவையே பாங்காக நடக்கச் செய்து வண்டுகள் சுற்றும் நீளக் கொன்றை மாலையை முடியில் அணிந்து உலகத்தோர் புகழும் நல்லை நகரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

6. பூச்சொரியும் உன் கோயில் நந்தவனத்தை ஆர்வத்தோடு அமைப்பவர் வாழ, பூக்குமுன்னே அலர் பருவத்தில் மலர் பறித்துத் தொடுத்து உன் கோயில் பணிக்காக அளிப்போர் வாழ, அப்பூக்களை மலரச்செய்ய நீரளிக்கும் குளம் கேணி ஆகியவற்றை அமைப்போர் வாழ, உன் புராணம் முதலியவற்றைப் படிப்போர் கேட்போர் வாழ, உன் கோயிலில் சேவை , பூசை, செய்து திருவிழாக் கொண்டாடுவோர் வாழ, நின் கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்வோர் வாழ யாரிய மகராசன் என்னும் காவலன் கட்டியகோயில் உள்ள ஊரும்  ஆறுமுக நாவலர் பிறந்த ஊருமான நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.



7. அடியவரின் துயர் களைபவரே ஆடுக ஊஞ்சல், ஹரியின் சாபம் தவிர்த்தவரே ஆடுக ஊஞ்சல். வடிவு, குணம் என்னும் பேதம் கடந்தவரே ஆடுக ஊஞ்சல், இம்மண்ணுலகம் உருவாகக் காரணரே ஆடுக ஊஞ்சல், பெரிய ஒற்றைக் கொம்பு உடையவரே ஆடுக ஊஞ்சல், எல்லாத் துன்பத்தையும் களைபவரே ஆடுக ஊஞ்சல். அழகாய் அமைந்த நந்தவனங்கள் சூழ்ந்த நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.

8. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோருக்கு முன்னவரே ஆடுக ஊஞ்சல். ஆறுமுகன் என்னும் தம்பிக்கு முன்னவரே ஆடுக ஊஞ்சல், வலிமையான மனம் உடையோருக்கு இனியவரே ஆடுக ஊஞ்சல், வலவை என்னும் ஊரில் வாழும் ஈசனுக்கு இனியவரே ஆடுக ஊஞ்சல், உமை என்னும் பெண்ணின் பாலகரே ஆடுக ஊஞ்சல், வேதகணங்களுக்கு அதிபதியாக விளங்குபவரே ஆடுக ஊஞ்சல், தாமரைத் தடாகங்கள் நிறைந்த நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல்.
வாழி.

சந்தத்தோடு முறைப்படி வேதத்தை ஓதும் அந்தணர்கள் வாழ்க, அமுதசுரபியாய் அள்ளித்தரும் மேகம் போன்ற வள்ளல்கள் வாழ்க, விந்தை மிகும் வண்ணம் இக்கோயிலை அமைத்த யாரிய மகராசனின் செங்கோலும் வாழ்க. மெல்லிய இயல்புடைய பெண்களின் கற்புத்தன்மையோடு தர்மமும் தழைத்தோங்கட்டும். ஐந்தெழுத்தோடு உய்யும் அனுபூதி வாழ்க. ஒவ்வொரு நாளும் சைவநெறி தழைத்து வாழ்க. தாமரை மலர்கள் பொழியும் நல்லை என்னும் ஊரில் உறையும் கைலாச விநாயகரே ஆடுக ஊஞ்சல் — with Chitra Kannan.

Monday, 21 August 2017

கணபதி 32


கணபதி 32



கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்
கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்
   1. பால கணபதி

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

  2.  பக்த கணபதி

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்  

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான  பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

3.  ஸக்தி கணபதி
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

4.  ஸித்தி கணபதி

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

5.  உச்சிஷ்ட கணபதி

நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்
தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:

சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்
கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

நீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.

நான்கு  கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.

6. க்ஷிப்ர கணபதி:
தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்
பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

தந்தம், கற்பகக் கொடி,  பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.

7.விக்ந ராஜ (விஜய) கணபதி
பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.

8.ஸ்ருஷ்டி கணபதி
பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும்,  , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.

9.ருணமோசந கணபதி:
பாஸாங்குஸௌ  தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான  ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய  திருவயிறு, ஆகியவற்றை உடையவரும்,  பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

10.டுண்டி கணபதி

அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

11.த்விமுக கணபதி

ஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர:
ரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:

தந்தம், பாசம், அங்குசம், ரத்தின பாத்திரம் தாங்கியவரும் ஹரியைப் போல்  நீல‌நிறத் திருமேனியுடன் கூடியவரும்  செந்நிற ஆடை; ரத்ன கிரீடம் தரித்தவரும் ஆன‌த்விமுக கணபதியைத் எந்நேரமும் துதிக்கிறேன்.

12.யோக கணபதி
யோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய
பாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:
யோகாசனத்தில் யோகபட்டம் தரித்த திருக்கோலத்தில் அழகு மிகுந்த தோற்றத்தில், இளஞ்சூர்யனைப் போன்ற திருமேனியுடன் நீல நிற ஆடை அணிந்து, பாசம், கரும்பு, அக்ஷமாலை, யோகதண்டம் தரித்து, அனுதினமும் அருள் பாலிக்கும் யோக விக்நேச்வரரைத் துதிக்கின்றேன்.

13. ஏகதந்த கணபதி
லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம்
ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே

பெருவயிறுடன் கூடியவராக,; நீல நிற மேனியுடன் பரசு, அக்ஷமாலை, லட்டுகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்த ஏகதந்த கணபதியைத் துதிக்கிறேன்.

14. ஹேரம்ப கணபதி
அபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா
ஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா
முன்னிரு திருக்கரங்களில், அபய வரத முத்திரைகளைத் தரித்தவரும், மற்ற கரங்களில், பாசம், தந்தம், அக்ஷமாலை, உலக்கை, கோடரி, மலர், மோதகம், பழம் ஆகியவற்றைத் தாங்கியவரும், சிம்மத்தை வாகனமாகக் கொண்டவரும், ஐந்து திருமுகங்களைக் கொண்டவரும்  ஹேரம்பர் என்ற திருநாமத்தை உடையவருமான ஹேரம்ப கணபதி நம்மைக் காக்க வேண்டும்.

15. ந்ருத்த கணபதி
பாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம்
பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்
பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் தாங்கிய கரங்கள்: மோதிரம் போல் வளைந்த துதிக்கை, பொன்னிறத் திருமேனி ஆகியவற்றுடன் கூடி, கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் அருளும் நிருத்த கணபதியைத் துதிக்கிறேன்.

16. ஹரித்ரா கணபதி
ஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும்
பாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச
பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம்

பாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம்
ஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே


மஞ்சள் நிறத் திருமுகத்துடன் ஐச்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவரும், பாசம், அங்குசம், மோதகம், தந்தம் தாங்கிய மஞ்சள் ஒளி வீசும் நாற்கரங்களை உடையவரும்,  பக்தருக்கு அடைக்கலம் ஈந்து தடைகளை அகற்றுபவருமான  - ஹரித்ரா கணபதியைத் துதிக்கிறேன்.

பாசம், அங்குசம், மோதகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், பொன்மயமான ஆசனத்தை உடையவரும் மஞ்சள் நிறத் திருமேனியை உடைய முக்கண்ணரும் பொன்னிறத்தினாலான பீதாம்பரத்தை தரித்தவரும் ஆன‌ஹரித்ரா கணபதியை வணங்குகிறேன்.

17. தருண கணபதி
பாஸாங்குஸாபூப கபித்த ஜம்பூ
பலம்திலாந் வேணுமபி ஸ்வஹஸ்தை:
த்ருத: ஸதாயஸ் தருணாSருணாப:
பாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, கரும்புத் துண்டு, முறித்த‌தந்தம் ஆகியவற்றைத் தாங்கிய எட்டுத் திருக்கரங்களும், இளங்கதிரவன் போன்ற செந்நிற மேனியும் கொண்ட தருண கணபதியைத் துதிக்கிறேன்.

18. வீர கணபதி
வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான‌ வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

19. த்வஜ கணபதி
ய: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர்
நிவ்ருத்யமாந கரபூஷண மிந்துவர்ணம்
ஸ்தம்பேரமாநந சதுஷ்டய ஸோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே ஸ தந்ய:

புத்தகம், அக்கமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவை நான்கு திருக்கரங்களையும் ஆபரணங்களாக அலங்கரிக்க, சந்திரனின் வண்ணத்தில் (வெண்ணிறத்தில்) ஒளிரும் திருமேனியை உடைவரும், கம்பம் போல் திடமானதும், சோபிப்பதுமான நான்கு திருமுகங்கள் கொண்டவரும் ச்ரேஷ்டருமான, த்விஜ கணபதியைத் துதிப்பவர் புண்ணியம் செய்தவராவார்.

20. விக்ந (புவநேச) கணபதி
ஸங்கேக்ஷூசாப குஸூமேஷூ குடாரபாஸ
சக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை:
பாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ
விக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:

சங்கு, கரும்பு வில், மலரம்பு, கோடரி, பாசம், சக்ரம், அங்குசம், பூங்கொத்து ஆகியவை தாங்கிய எண்கரங்களை உடையவரும், விரும்பத் தக்க அலங்காரங்கள் சூழ சோபையுடன் விளங்குகிறவரும், பொன்னிறத் திருமேனியை உடையவரும் ஆன  விக்ந விநாயகரைத் துதிக்கிறேன்.

21. ஊர்த்வ கணபதி
கல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண
தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க:
ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா
தேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே

செங்கழுநீர்ப் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு; தந்தத்தில் தாங்கிய கதை முதலியவற்றைக் கரங்களில்  தரித்த‌, பொன் போல மின்னும் திருமேனியை உடையவரும்,  பச்சை நிற திருமேனியளான தேவியை ஆலிங்கனம் செய்தவாறு அருட்காட்சி  தருபவருமான‌ ஊர்த்வ கணபதியைத் துதிக்கிறேன்.

22. லக்ஷ்மீ கணபதி
பிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந்
பாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர:
ஸ்யாமேணாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே
கௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத்

தந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம்
த்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே

திருக்கரங்களில் இருக்கும், கிளி, செம்மாதுளம்பழம், தாமரை, மாணிக்கமயமான  கும்பம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, வாள் ஆகியவை, ஜோதிப் பிரகாசம் போல் ஒளி வீச பிரகாசமான திருமுகத்துடன், நீல வண்ண ஆம்பல் மலரைத் தாங்கிய, வெண்ணிறத் திருமேனியை உடைய இரு தேவியரை இரு புறமும் அருகில் அமர்த்திக் கொண்டு, பொன்னிறத் திருமேனியை உடையவராக வரம் தரும் (வரத முத்திரை) கரத்துடன் விளங்கும் லக்ஷ்மீ கணபதியைத் துதிக்கிறேன்.

தந்தம், அபயம், வரதம், சக்ரம் ஆகியவை தாங்கிய  கரங்களுடையவரும்,  துதிக்கையில் பொற்கலசம் ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும்,, செந்தாமரை ஏந்திய லக்ஷ்மீயுடன் கூடியவருமான, பொன்னிற மேனியை உடைய லக்ஷ்மீ கணபதியை வணங்குகிறேன்.

23. மஹா கணபதி
ஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத்
ஆஸ்லிஷ்டம் ப்ரியயா ஸ பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே

சிறந்த யானை முகத்தை உடையவரும், பிறைச்சந்திரனை மணிமுடியில் தரித்தவரும், சிவந்த மேனியை உடையவரும், முக்கண்ணரும், தாமரையைக் கரத்தில் தாங்கிய அன்புக்குரிய தேவியை மடி மீதில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம் முதலியவற்றைக் கரங்களில் தரித்தவரும், துதிக்கையில் ரத்ன கலசம் தாங்கியருளுபவருமான‌ மஹாகணபதியைத் துதிக்கிறேன்.

24. ஏகாக்ஷர கணபதி
ரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக
குஸூமயுதஸ்தும் திலஸ் சந்த்ரமௌலி:
நேத்ரைர் யுக்தஸ்த்ரிபி: வாமநகர
சரணோ பீஜபூரம் ததாந:
ஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ
நாகவக்த்ரோSஹி பூஷோ
தேவ:பத்மாஸநஸ்தோ பவது ஸூககரோ
பூதயே விக்நராஜ:

சிவந்த நிறப் பட்டாடை அணிந்து, சிவப்பு நிற மலர் மாலையுடன், செந்நிறத் திருமேனியும், பிறை அணிந்த் திருமுடியும் கூடியவராக,  முக்கண்களும், சிறிய அளவிலான (குள்ளமான) கரங்கள்-கால்கள் உடையவராக‌, மாதுளம்பழம், அங்குசம், பாசம், வரதம் கைகளில், யானை முகம், நாகம் ஆபரணம் ஆகியவற்றையும், ஐஸ்வர்யத்தின் அறிகுறியாகக் கிளியையும் கரங்களில் தாங்கியவராக, பத்மாசனத்தில் அமர்ந்து அருளும், ஏகாக்ஷர கணபதியாம் விக்னராஜனைத் துதிக்கிறேன்.

25. வர கணபதி
ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
ஹஸ்தே ச பாஸங்குஸௌ
பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
ஸாத்விந்து மௌலிம் பஜே
புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
பத்மோல்லஸத்தஸ்தயா
தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
பாத்ரோலஸத் புஷ்கரம்

செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத்  தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில்  ஏந்தியவர்.

26. த்ரயாக்ஷர கணபதி
கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம்,   தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான  த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.

27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி
த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு  உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.

28. உத்தண்ட கணபதி
கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
பாஸஞ்ச சக்ராந்விதம்
கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
உத்தண்ட விக்நேஸ்வர:
நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான  உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.

29. த்ரிமுக கணபதி
ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
தக்ஷே ததாந: கரை:
பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
வாமே ததாநோ முதா
பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
ஸத்கர்ணிகா பாஸூரே
ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
நாகாநந: பாதுந:
கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச,  பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.

30. ஸிம்ஹ கணபதி

வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
தக்ஷே விதத்தே கரை:
வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம்
ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
ஸங்கேந்துகௌர: ஸூப:
தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
பாயாதபாயாத் ஸந:

வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.

31. துர்கா கணபதி

தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
தந்தம் தக்ஷேவஹந் கரை:
வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
ஜம்பூத்யதத் கரை:
ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
துர்கா கணபதிர் முதே

உருக்கிய  பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு,  ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.

32. ஸங்கடஹர கணபதி

பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்
பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க,  வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும்,  பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கிறேன்.

===================================

Sunday, 20 August 2017

உச்சிப் பிள்ளையாரை....

                                       

                                      உச்சிப் பிள்ளையாரை....


                                                         பல்லவி

                                  உச்சிப் பிள்ளையாரை மலைக்கோட்டை கணபதியை
                                  பச்சை அருகம் பில் தூவிப் பணிந்தேன்

                                                      அனுபல்லவி

                                  நச்சரவம்தனை இடையிலணிந்தவனை
                                  அச்சுதன் கேசவன் விரும்பும் மருகனை

                                                           சரணம்

                                  துச்சமாயரக்கன் கஜமுகனை அழித்தவனை
                                  பச்சிளம் பாலகனாய் காட்சியளிப்பவனை
                                  சச்சிதானந்தன் ஈசன் சிவன் மகனை
                                  மெச்சித்துதித்தேன் எனக்கருள வேண்டுமென

சிந்தாமணிகணபதியை........





                                     சிந்தாமணிகணபதியை........




                                                     பல்லவி

                             சிந்தாமணி கணபதியை வந்தனை புரிந்தேன்
                             விந்தைகள் செய்து பக்தரைக் காக்கும்

                                                   அனுபல்லவி

                              உந்தி கமலன் கேசவன் மருகனை
                              இந்தினிளம்பிறை சூடிய கரிமுகனை

                                                        சரணம்

                               குந்தகமின்றி கருமங்கள் நடைபெற
                               சந்ததம் அனைவரும் முதன் முதல் வணங்கிடும்
                               அந்தமுமாதியுமில்லாத தேவனை
                               கந்தசோதரனை கணங்களின் அதிபதியை

Friday, 18 August 2017

விகடசக்கர விநாயகனை...

                                   விகடசக்கர விநாயகனை...



                                                  பல்லவி

                 விகட சக்கர விநாயகனைத் துதித்தேன்
                 இகபரமிரண்டிலும் சுகம் பெற வேண்டியே

                                அனுபல்லவி

                  சகலரும் பணிந்திடும் ஆனைமுகத்தோனை
                  குகசோதரனைக் கேசவன் மருகனை

                                                           சரணம்

                    பகலவன் ஒளியினும் ஒளி மிகுந்தவனை
                    நிகர் தனக்கொருவரும் இல்லாத தேவனை
                    ஜகமனைத்தும் புகழும் சங்கரன் மைந்தனை
                    புகலவன் பங்கய பாதங்களென்றே










விகட சக்கர விநாயகர்

இருப்பிடம்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில்
பல்லவர் கோபுரத்தை ஒட்டி ஆயிரங்கால்
மண்டபத்துள் உள்ளார்.
சிறப்பு -இவரே காஞ்சிபுரத்திற்குரிய
தல விநாயகராவார்.
புராண வரலாறு
ஒருமுறை திருமால் தன் சக்ராயுதத்தைத் ததீசிமுனிவர் மீது ஏவியதால் அவ்வாயுதம் கூர் மழுங்கியது. பின்னர், திருமால் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து, குறைந்த ஒரு பூவிற்காகத் தன் கண்ணையே பூவாக பாவித்து, அர்ச்சனையை முடித்து, சக்ரபுதமும், கண்ணும் பெற்றார். சலந்தரனை அழிக்க, உண்டாக்கிய சக்ராயுதத்தை தக்கன் யாகத்தின் போது வீரபத்திரர் மீது ஏவ, அச்சக்ராயுதத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையிலிருந்த ஒரு கபாலம் விழுங்கிவிட்டது.
சக்ராயுதத்தை இழந்த திருமால் சக்ராயுதமின்றி காத்தல் தொழிலை எவ்வாறு செய்வேன்?
என்று கவலையுடன் இருந்தார். அதைக் காணச் சகியாத விஷ்வ்க்சேனர், தக்கயாகத்தின்போது, திருமால் தன்னை வீரபத்திரரின் சூலத்திலிருந்து காத்த நிகழ்வை நினைத்து உளம் நெகிழ்ந்தவராய், சக்ராயுதத்தை மீளப் பெற, வீரபத்திரரைப் பார்க்கச் சென்றார்.
ஆனால், அங்கு குழுமியிருந்தோர், விஷ்வக்சேனரை, வீரபத்திரரைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. அந்நிலையில் முனிவரொருவரின் அறிவரையின் பேரில் காஞ்சிமாநகர் வந்து ஒரு சிவலிங்கம் நிறுவி வழிபட வீரபத்திரர் காட்ச்சி தந்து, சக்ராயுதம் கபால மாலையில் உள்ள கபாலத்திடம் இருக்குமானால் கபாலத்திடமே பெற்றுக்கொள்ளுமாறு கூறியருளினார்.
இந்நிலையில் செய்வதறியாது திகைத்த விஷ்வக்சேனர், தள்ளாடி கையையும், காலையும் கோணலாக்கி நடக்க, கபாலங்கள் உள்பட எல்லோரும் சிரிப்பதை கவனித்த விஷ்வக்சேனர்.இவ்வாட்டத்தைத் தொடர,சக்ராயுதத்தை வாயில் கொண்டிருந்த கபாலமும் சிரித்துவிட்டது. உடனே, சக்ராயுதம் கீழே விழுந்தது.
அச்சக்ராயுதத்தை விஷ்வக்சேனர் எடுக்கும் முன், விநாயகப் பெருமான் எடுத்துக் கொண்டார். விஷ்வக்சேனர் வேண்ட, விநாயகப் பெருமான், தனக்காக ஒருமுறை விகடக் கூத்தாடும்படிக் கூறினார். விஷ்வக்சேனரும் விகடக்கூத்தாட விநாயகரும் மகிழ்ந்து சக்ராயுதத்தைத் தந்தருளினார்.
சக்ராயுதம் பெற்ற விஷ்வக்சேனர் மகிழ்ந்து, திருமாலிடம் அச்சக்ராயுதத்தைச் சேர்பித்தார். திருமாலும் இச்செயலைப் பாராட்டி விஷ்வக்சேனரை தலைமைச் சேனாதிபதியாக நியமித்தார்.
விஷ்வக்சேனரின் விகடக்கூத்திற்காக, சக்ராயுதத்தை எடுத்து பின் தந்த விநாயகர், விகட சக்கர விநாயஜர் என்று போற்றப்பட்டாலும், மனதின் ஏதோ நெருடல் ஏற்படுகிறது. இறைவர் செயலில் காரணங்கள் நம் சிற்றறிவிற்கு உட்பட்டதோ? என்று தோன்றினாலும், கடாலத்தின் வாயிலிருந்து வீழ்ந்து சக்ராயுதம் புனிதம் பெறவே விநாயகர் எடுத்தார் போலும், பெற்ற எதையும் தவறாக பயன்படுத்தினால், அப்பொருள்ள் நம்மிடமிருந்து நீங்கிவிடும்.
சிவபூஜையே இழந்த பொருளை மீட்டுத் தர வல்லது.
பெறும் பொருள்கள் புனிதத் தன்மைபெற விகடசக்ர விநாயகர் அருளுவார்.
நன்றி-இணையதளம்.

திருக்கடையூர் வளர்......




                                             திருக்கடையூர் வளர்......


                                                     பல்லவி

                               திருக்கடையூர் வளர் அபிராமியைத் துதித்தேன்
                               அருள்மிகு அமிர்தகடேச்வரர் உடனுறை

                                                     துரிதம்

                                நரர்சுரர் முனிவர்கள் கணபதி சரவணன்
                                அரனரி அயனும் கரம்பணிந்தேத்தும்

                                                    அனுபல்லவி

                                வருமிடர் நீக்கி வாஞ்சையுடன் காக்கும்
                                கருணை நிறைந்த கேசவன் சோதரி

                                                         சரணம்

                                பெருமைக்குரிய அந்தாதி அருளிய
                                அபிராம்பட்டரை ஆட்கொண்ட ஈச்வரி
                                கருமவினைப் பயனால் கட்டுண்ட என்னை
                                அருளமுதளித்து ஆட்கொள்ள வேண்டியே

சந்தானராமஸ்வாமியை........






                                சந்தானராமஸ்வாமியை........



                                             பல்லவி

                             சந்தானராம ஸ்வாமியைப் பணிந்தேன்
                             யமுனாம்பாபுரிதனில் கோயில் கொண்ட

                                             துரிதம்

                              இந்த்ராதி தேவரும் சனகாதி முனிவரும்
                              நாரதர் நான்முகன் அனைவரும் வணங்கிடும்

                                           அனுபல்லவி

                            எந்தனைக் காத்தருள வேண்டுமெனத் துதித்து
                            சந்ததம் ஆயிரம் திருநாமமுரைத்து

                                                 சரணம்

                             வந்தனை புரிந்திடும் அடியார்க்கருள்பவனை
                             நிந்தனை செய்திடும் நீசரையும் காக்கும்
                             விந்தை குணம் படைத்த ஜானகிராமனை
                             அந்தமுமாதியும் இல்லாத கேசவனை

மாமறைகள் போற்றும்.........



                                                மாமறைகள் போற்றும்.........




                                                      பல்லவி

                                   மாமறைகள் போற்றும் ஶ்ரீலலிதாம்பிகையே
                                   தேமதுரத்தமிழால் பாடியுனைத் துதித்தேன்

                                                     அனுபல்லவி

                                    பூமகள் நாதன் கேசவன் சோதரி
                                    மாமேருதனிலமர் திரிபுரசுந்தரி

                                                          சரணம்

                                    பாமரரும் பண்டிதரும் வணங்கிடும் ஈச்வரியே
                                    நாமமாயிரம்  நாவார உரைத்து
                                    தூமலர் தூவிப் பாதம் பணிந்தேன்
                                    தாமரை பதத்தினளே தாயேயெனக்கருள்வாய்



                இராகம்: இந்தோளம்
                 தாளம் :  ஆதி

Thursday, 17 August 2017

மேகநாதனை.......


                                        மேகநாதனை.......



                                                பல்லவி

                               மேகநாதனை சகலபுவனேச்வரனை
                               மகாதேவனை மனமாரப் பணிந்தேன்

                                                அனுபல்லவி

                                ஶ்ரீகணநாதனும் முருகனும் உமையும்
                                 நாகராஜனும் கரம் பணிந்தேத்தும்

                                                      சரணம்

                                  ஆகமவேத புராணங்கள் போற்றும்
                                   நாகநாதனை நமச்சிவாயனை
                                   நாகத்தணையான் கேசவன் நேசனை
                                   யாகப்பிரியனை உமாமகேச்வரனை

Wednesday, 16 August 2017

இடையறாதுனை.........

             

                                                    இடையறாதுனை.........


                                                                பல்லவி

                                       இடையறாதுனை துதித்திடும் வரமருள்வாய்
                                       இடையர் குலத்துதித்த கேசவனே கோவிந்தா

                                                              அனுபல்லவி

                                       குடையாக கோவர்த்தன மலைதனைப் பிடித்தவனே
                                       படையெடுத்து தசகண்டன் சிரம் கொய்த ராகவனே

                                                                   சரணம்

                                       சடையன் சிவபெருமானும் நான்முகனும் நாரதரும்
                                       சுகசனகாதியரும் தேவர்களும் முனிவர்களும்
                                       இடைவிடாது  பணிந்தேத்தும் பரமனே உன்
                                       நடை வந்து வணங்கி நாவார என்றும்
                                     
                                     
                                        

Saturday, 12 August 2017

அழகன் சௌம்யநாராயணனை......


                               அழகன் சௌம்யநாராயணனை......



                                                   பல்லவி

                                     அழகன் சௌம்ய நாராயணனை
                                     பழகு தமிழில் பாடித்துதித்தேன்

                                                  அனுபல்லவி

                                     குழலூதி மனங்களை கொள்ளை கொள்பவன்
                                     மழலைக் கண்ணனாய் மாயங்கள் செய்பவன்

                                                        சரணம்

                                     
                                     சுழலும் சக்கரமும் சங்கும் கையிலேந்தும்
                                     எழில்மிகு கேசவன் மாதவன் மதுசூதனன்
                                     அழலேந்தும் நெற்றிக் கண்ணனும் பிரமனும்
                                      நிழலென உடனிருக்கும் திருமகளும் போற்றும்

Friday, 11 August 2017

நின்ற வண்ணம்......




                                            நின்ற வண்ணம்......



                                                       பல்லவி

                                நின்ற வண்ணம் காட்சி தரும் சௌம்யகேசவனை
                                முன்னின்று துதித்தேன் எனக்கருள வேண்டுமென
                             

                                                         துரிதம்

                                  நரர்சுரர் நாரதர் ஆதிசேடனுடன்
                                  சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்

                                                      அனுபல்லவி

                               குன்றைக் குடையாகப் பிடித்த கோபாலனை
                               சென்றிலங்கை அரக்கரின் செருக்கழித்த ராகவனை

                                                           சரணம்

                               அன்று மூவடியாலுலகளந்த வாமனனை
                               பன்றியின் வடிவெடுத்து இவ்வுலகை மீட்டவனை
                               என்றும் அடியார்கள் நலம் காக்கும் மாதவனை
                               இன்று எமக்கிரங்கி நாகமங்கலம் தன்னில்

செலுவ நாராயணன்





                                                  செலுவ நாராயணன்



                                                        பல்லவி

                                      அருள்மிகு செலுவ நாராயணனின்
                                      திருவடி பணிந்தேன் தயைபுரிய வேண்டுமென

                                                      அனுபல்லவி

                                     தருமம் தழைத்திடும் திரு நாராயணபுரமெனும்
                                     பெருமை மிகு தலத்தில் எழுந்தருளிக் காட்சிதரும்

                                                           சரணம்

                                    திருமகள் யதுகிரிநாச்சியார் மனங்கவர்
                                    திருநாராயணன் அழகன் கேசவன்
                                    விரும்பும் வரங்களை அடியார்க்கு வழங்கிடும்
                                    கருணை கடலவன் தீனசரண்யன்

                                     
                                     


திருநாராயணனை.......








                                         திருநாராயணனை.......



                                                பல்லவி

                                திருநாராயணனை மனமாரத்துதித்தேன்
                                கருணை வைத்தெனை ஆண்டருள வேண்டுமென

                                              அனுபல்லவி

                                அருமறைகள் போற்றும் ஆதிகேசவனை
                                கருநிறவண்ணனை கமலநாபனை

                                                   சரணம்

                                 குருராமானுஜரும் நரர் சுரரும் நாரதரும்
                                 திருமகளும் பிரமனும் கரம் பணிந்தேத்தும்
                                 பெருமைக்குரிய பாற்கடல் வாசனை
                                 திருநாராயணபுரமெனும் திருத்தலத்தில்
                                

Wednesday, 9 August 2017

சுந்தரி உனையே.......





                                                 சுந்தரி உனையே.......


                                                    பல்லவி

                                      சுந்தரி உனயே சந்ததம் துதித்தேன்
                                      வந்தருள் தருவாய் தாயே -  திரிபுர

                                                     துரிதம்

                                      கந்தன் கணபதி நந்தி கணங்கள்
                                      இந்திரன் நரர்சுரர் முனிவர்கள் வணங்கிடும்

                                                       அனுபல்லவி

                                     வந்து சரணடையும் அடியவர்க்கெல்லாம்
                                     தந்தருள் நல்கும் கேசவன் சோதரி
                       
                                                            சரணம்

                                     நிந்தை புரிந்திடும் நீசர் தமக்கும்
                                     உன் தயை நல்கிடும் உமையே கௌரி                                
                                     முந்தைய பழவினைப் பயன்களைக் களைந்து
                                     எந்தனை காத்தருள வேண்டியே வான்மியூர்
                 

Monday, 7 August 2017

ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி



                             ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி ....
                                 

                                                 பல்லவி

                               ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
                               காலில் கொலுசணிந்த பரமேச்வரி கௌரி

                                               அனுபல்லவி

                                காலகாலன் மேகநாதன் மனங்கவரீச்வரி
                                நீலவண்ணக்கண்ணன் கேசவன் சோதரி

                                                    சரணம்

                                தவயோக முனிவரும் ஞானியரும் போற்றும்
                                புவனேஸ்வரி ஶ்ரீ ராஜராஜேஸ்வரி
                                நவரத்தினங்களாய் அகத்தியர்க்கருள் செய்த
                                சிவகாமேச்ரி உனதருள் வேண்டினேன்

Sunday, 6 August 2017

உனதருள்.......


                                              உனதருள்.......


                                                        பல்லவி

                                       உனதருள் ஒன்றே வேண்டினேன் ஶ்ரீலலிதே
                                       மனதிலன் நாமமே அனுதினம் துதித்தேன்

                                                      அனுபல்லவி

                                       சினந்து நீ தவிர்த்தாலும் பரிந்தெடுத்தணைத்தாலும்
                                       கனகதுர்கே தாயே கேசவன் சோதரி

                                                           சரணம்

                                       தினகரன் ஒளியையும் மிஞ்சும் ஒளியுடையவளே
                                       அனங்கனின் அழகை பழிக்கும் பேரழகே
                                       அனல் புனலேந்தும் சிவனிடம் கொண்டவளே
                                       கனகமலைதனில் வீற்றிருப்பவளே



                        இராகம்:சாமா
                        தாளம்: ஆதி

Saturday, 5 August 2017

தாமரைப்பூவிலமர்.....



                                         தாமரைப்பூவிலமர்.....


                                                      பல்லவி

                                 தாமரைப்பூவிலமர் தாமரைச்செல்வியுன்
                                 தாமரைக்கடைக்கண்  அருள் வேண்டித்துதித்தேன்

                                                    அனுபல்லவி

                                 தாமரைநாபன் கேசவன் நாயகி
                                 மாமறைகள் போற்றும் மகாலக்ஷ்மி
                     
                                                          சரணம்

                                 காமனும் நாணும் பேரழகி
                                 பாமரர் பண்டிதர் தேவர்கள் முனிவர்கள்
                                 நாமகள் மலைமகள் நாரதர் நான்முகன்
                                 யாவரும் பணிந்தேத்தும் கோமளவல்லி
                               
                               
                                 

Friday, 4 August 2017

கோதண்டராமன் ........







                                           கோதண்டராமன் ........


                                                   பல்லவி

                               கோதண்டராமனின் பாதம் பணிந்தேன்
                               சீதா லக்ஷ்மணன் மாருதி உடனிருக்கும்
       
                                                 அனுபல்லவி

                               ஆதரவளித்தெனைக் காத்திட வேண்டுமென
                               மாதவன் கேசவன் மதுசூதனன் - வடுவூர்

                                                      சரணம்

                                பாதகம் செய்திடும் அரக்கரையழித்த
                                ஆதவகுலத்துதித்த தசரத ராமன்
                                வேதனை வினை தீர்க்கும் கோசலராமன்
                                 மேதினி போற்றும் பட்டாபிராமன்

இராகம்: ரீதிகௌளை
தாளம்: ஆதி

                  

Wednesday, 2 August 2017

சதுரங்கவல்லபநாதனை


                                    சதுரங்கவல்லபநாதனை......


                                                        பல்லவி

                                         சதுரங்கவல்லபநாதனைத் துதித்தேன்
                                         சதுர்மறை போற்றும் தேவாதி தேவனை

                                                        அனுபல்லவி

                                          புதுப்பொலிவுடனே காட்சியளித்திடும்
                                          கற்பகவல்லி உடனிருந்து பணிந்திடும்

                                                               சரணம்

                                            மதுரமொழி பேசும் ராஜராஜேஸ்வரியும்
                                            சதுர்முகனும் முருகனும் கணபதியும் மற்றும்
                                            நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
                                            கரம் பணிந்தேத்தும் கேசவன் நேசனை

Tuesday, 1 August 2017

பிறவா வரமருள்வாய்.....



                                                 பிறவா வரமருள்வாய்.....


                                                       பல்லவி

                                         பிறவா வரமருள்வாய் கேசவா
                                         பிறந்தாலும் உன்னை மறவா மனம் தருவாய்

                                                       அனுபல்லவி

                                          அறவழி வாழும் அடியாருடன் கூடி
                                          பிறவிப்பிணி தீர உனதருள் வேண்டினேன்

                                                           சரணம்

                                          பறவையரசன் மீதேறி பவனி வரும்
                                          அரிநாராயணனே அச்சுதா மாதவா
                                          உறவும் சுற்றமும் எதுவும் சதமல்ல
                                          அறிந்தே உனைத்துதித்தேன் ஆதிமூலமே