Friday, 21 February 2020

ஶ்ரீராம பாதமே....






                               ஶ்ரீராம பாதமே....




                                                          பல்லவி

                                            ஶ்ரீராம பாதமே என்றும் எந்தன்துணை
                                            தாரகராமன் தசரதன் மைந்தன்

                                                        அனுபல்லவி

                                            வீராதி வீரன் வில் வித்தையில் சிறந்த
                                            வீரராகவன் பரந்தாமன் கேசவன்

                                                             சரணம்

                                            ஆராவமுதனவன் அழகிய மணவாளன்
                                            பாரோர் பணிந்தேத்தும் அயோத்தி மாமன்னன்
                                            நாராயணனுமவனே நான்மறை போற்றும்
                                            பேராயிரம் உடைய பட்டாபிராமன்

                                            கோரதாடகை மாரீசனை கொன்றவன்
                                            ஏராளமான ராவணாதியரை
                                            கூரான அம்புக்கிரையாகச் செய்தவன்
                                            தீராவினைகளைத்தீர்க்கும் திருமாலவன்
                                             

Tuesday, 18 February 2020

கரும்புச் சாறெனவே








                            கரும்புச் சாறெனவே.......




                                                             பல்லவி

                                       கரும்புச் சாறெனவே இனித்திடும் திருநாமம்
                                       திருமால் கேசவனின் ஶ்ரீராம நாமம்

                                                          அனுபல்லவி

                                       விருப்பமுடன் துதிக்கும் அடியவர்க் கெல்லாம்
                                       திருவருளும் குருவருளும் அளித்திடும் திவ்ய நாமம்

                                                               சரணம்

                                       இருவினைப் பயன் நீக்கும் இனியதோர் நாமம்
                                       வருமிடர் தவிர்த்திடும் ரகுராமன் நாமம்
                                       தருமநெறி காக்க தரணியிலவதரித்த
                                       திருநிறைச் செல்வன் ஜெயராமன் நாமம்
         

Tuesday, 4 February 2020

சேவிக்க வேண்டும்.......







                         சேவிக்க வேண்டும்.......




                                                             பல்லவி

                                      சேவிக்க வேண்டும் ஶ்ரீராமனை தினமும்
                                      தூவி மலர் சொரிந்து மனமாரத் துதித்து

                                                           அனுபல்லவி

                                      தேவி ஜானகியின் மனங்கவர் நாயகனை
                                      ஆவினங்கள் மேய்த்தவனை மாதவனைக் கேசவனை

                                                               சரணம்

                                      கூவியழைத்தால் ஓடோடி வருவான்
                                      தாவி வந்தபயம் கரிகளித்த மாவீரன்
                                      மாவிடை வாகனன் நமச்சிவாயனும்
                                      நாவாரப் போற்றும் காவிய நாயகன்

                                      தேவர்கள் தலைவன் இந்திரனும் துதிக்கும்
                                      தேவாதி தேவன் பானுகுல திலகன்
                                      தேவரும் பிரமனும் நாரதரும் வணங்கும்
                                      கோவலன் அயோத்தி மாநகர்க் காவலன்
                               
                                      பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
                                      கோவிந்தனபலையின் மானம் காத்தவன்
                                      மூவடி மண் கேட்டு மாவலியை வென்றவன்
                                      கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன்
                                     
                                       தாவிடும் குரங்கின அரசனின் நேசன்
                                       சேவற்கொடியோன் குமரனின் மாமன்
                                       புவி போற்றிப் புகழ்ந்திடும் கோசலராமன்
                                       கவி வால்மீகியின் காவியத் தலைவன்
                                                               

வணங்கினேன்......







                        வணங்கினேன்......




                                                     பல்லவி

                                   வணங்கினேன் ஶ்ரீமகா கணபதியை
                                   துணையவன் இணையடி நிழலென நம்பியே

                                                     துரிதம்

                                   நந்தியும் கணங்களும் நாகராஜனும்
                                  தேவரும் பணியும் சங்கரன் மகனை

                                                    அனுபல்லவி

                                   அணங்குகள் சித்தியும் புத்தியும் மணந்த
                                   கணங்களின் தலைவனை வேழமுகத்தோனை

                                                          சரணம்

                                    அவல் பொரியும் நாவல் பழமும்
                                    எளிய நைவேத்தியமும் அளித்தாலும் போதும்
                                    வரங்களை பக்தருக்கு மழையெனப் பொழியும்
                                    கேசவன் மருகனை கோமந்தகத் திருத்தலத்தில்


                                    ராகம்: ஸஹானா
                                    தாளம் : ஆதி

Monday, 3 February 2020

முகநூல் குழப்பங்கள்



                                                     முகநூல் குழப்பங்கள்🤔


                             கொஞ்ச நாளாவே இந்த குழப்பங்களை யார் கிட்டயாவது சொல்லிப் புலம்பணும்,
கொட்டித்தீர்க்கணும்னு மனசு அலைபாயறது. யாருமே இல்லாத தனிமை போகட்டும்னு தான் சித்த
நேரம் முகநூல்ல நேரத்த செலவழிக்கலாமேனு நண்பர் சொன்னத கேட்டு , ...லாமேனு இந்த முகநூல் சமுத்திரத்தில நுழைஞ்சேன் சில வருடங்களுக்கு முன். ஆரம்பத்தில் கையும் புரியல காலும் புரியல என்ன எழுதணும், எப்படிப் பதியணும்னு  தெரியல . பிறகு அப்படி தவழ்ந்து முட்டுக்
குத்தி என் முகநூல் பயணத்தைத் தொடர்ந்தேன். என் சுவற்றில் கொஞ்சம் கொஞ்சமா கருப்பு
வெள்ளை சாயம் பூசி ஏதோ அப்படி இப்படி எழுதி பதிவுகள் போட கற்றுக் கொண்டேன். அப்பலாம் எல்லாரும் காலை, மாலை, இரவு வணக்கம் போடுவதை ப்பார்த்து நானும் போடத்தொடங்கினேன்.
அதற்கு சிலர் லைக்கும் போட்டனர் பதிலுக்கு வணக்கம் வைத்தனர். இது சுலபமாக இருந்தாலும்
சற்றே அலுப்புத் தட்டத் தொடங்கியது. சிலர் நட்பு அழைப்பு விடுத்தனர் ஏற்றுக்கொண்டேன். பிறகு மெள்ள மெள்ள ஒன்றிரண்டு குழுக்களில் அங்கத்தினானாக இணைத்துக்கொண்டேன். பெரும்பாலும் அதில் வம்பு, அக்கப்போர், சுய தம்பட்டம், ஒருவருக்கொருவர் முதுகு சொரிதல், சிலர்குழுவுக்குள்ளேயே தமக்கென அங்கீகாரம் ஏற்படுத்திக் கொண்ட பிரபலங்களின் சாகசங்களின் விளம்பரங்கள் , அவர்களுக்கான ஜாலராக்களின் லைக்குகள், பாராட்டல்கள், கைத்தடல்கள்,இன்ன பிற. இதிலெல்லாம் நாட்டம், ஈடுபாடு ஏற்படாமல் இப்படி ஓடிக்கொண்டிருந்தது.  சரி ஏதோ ஶ்ரீராம ஜயம், ராம ராமா, ஓம் நமச்சிவாய என தினம் எழுதும் பழக்கமில்லாதவனாக, அவ்வப்போது இறைவனை வேண்டி மன நிம்மதிக்காக எழுதிய என்னுடை
பாடல்களை பதிவிட ஆரம்பித்தேன்.  ஒரு சில பாடல்களுக்கு சில லைக்குகள் கிடைத்து. அந்த
லைக்குகள்  பாடலுக்கா அல்லது  பாடலுக்கான கடவுளரின் படங்களுக்கா என்பது இப்பவும் என்
மனதில் விவாதத்திற்கான பொருளே. எப்படியானாலும் இதன் மூலம் ஒரு மன நிறைவும் நிம்மதியும்
கிடைத்தது.  மொத்தத்தில் பாடல்ஒகளுக்கு ஒரு வரவேற்பு இருப்பதாகவே தோன்றியது.
இதனால் மேலும் உற்சாகமடைந்து நிறைய முகநூல் குழுக்களில் நிறைய பாடல்கள் பதிவிட
ஆரம்பித்தேன். ஆனால் அதிலும் சில நெளிவு சுளிவுகள் கவனிக்கப் படவேண்டியிருந்தது. என்னைப் பொறுத்த வரை எந்த கடவுளுக்குள்ளும் பேதம் கிடையாது. சிவனும், திருமாலும்,
முருகனும், கணபதியும், யாவரும் போற்றி வணங்கப் படவேண்டிய இறை வடிவங்களே, முழுமுதற்
கடவுள்களே. ஆனால் சில பல குழுக்களுக்குள் இந்த பேதம் தீவிரமாக பாராட்டப் படுகிறது.
 சைவ, வைணவ, சாக்த, காணாபத்ய, ...பேதங்கள் தீவிரமாகப் பாராட்ட படுவது கண்டு அதிசயித்தேன். சரி அவரவருக்கு அவரவர் தெய்வம் உசத்தி. இருந்து விட்டு போகட்டுமே என்று
விட்டு விட்டேன். ஆனால் பாடல் பதிவிடும் போது கவனமாக இருக்க வேண்டும் அந்த அந்த குழுவில் அதற்கான இறை பாடல்களை பதிவிட வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டு செயல்
பட்டேன். ஓரளவு வெற்றியும் கண்டேன். இப்படி பயணம் சுருதி லயமாக ஒடிக்கொண்டிருந்தது.
நிறைய நண்பர் பாராட்டுக்கள் கிடைத்தன. மகிழ்ச்சியாகவே பயணித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு நாள் மார்க், அதாங்க, முகநூல் முதலாளி அவருடைய அல்லகைகள் மூலமாக ஒரு
முன்னறிவிப்பும் இல்லாம நான் பதிவு செய்வதை முடக்கிவிட்டார். என்ன ஏதுனு விவரமும் சொல்லல, தெரியல. மொத்தத்தில் திடீர்னு நிப்பாட்டிட்டார். அப்பறம் ஒரு மொட்டை மெசேஜ்
“ நீ ரெண்டு நாளுக்கப்பறம் இந்த நேரத்திற்கு பிறகு போஸ்ட் போடலாம்னு” வந்தது.  சரினு நானும்
இரண்டு நாள் ப்ரேக் எடுத்திட்டு ஆனந்தமா பயணத்தை தொடரந்தேன். பாடல்களை பதிவு செய்தேன். அதன் பிற்பாடு மூன்று நான்கு மாதங்களுக்கு பிறகு அதே மாதிரி மார்க்குடைய எடுபிடிகள் என் பதிவை இரண்டு நாள் முடக்கினர்.  இதற்கிடையில் “ஹேக்கர்ஸ்”  வேறு என் முகநூலில் தங்கள் கைவரிசையை இரண்டு மூன்று முறை காட்டியுள்ளனர். பெரிய டேமேஜ் ஒண்ணும் ஏற்பட்டா மாதிரித் தெரியல . இப்ப சமீபமாக சில நாட்களுக்கு முன் மார்க்கின் கையாட்கள் தங்கள் வேலையைக் காட்ட துவங்கி இருக்காங்க.  திடீரென பாடல்களை குழுக்களுக்குப் பகிரும் வசதியை முடக்கி விட்டனர். பாடல்களை பல குழுக்களுக்கு ஒரே சமயத்தில் பகிர்ந்துள்ளீர்கள். இது குழுக்களுக்கு இடைஞ்சல் என அச்சப் படுகிறோம். அதனால் இந்த வசதி இரண்டு நாட்களுக்கு முடக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்கள். எனக்குத் தெரிந்த வரையில் எந்த முகநூல் குழுவும் அவ்வாறு என்னிடம் தெரிவிக்கவில்லை.  இப்படி இருக்க மார்க்கின் அடியாட்கள் ஏனிப்படி அடாவடி செய்யவேண்டும். இவர்கள் யார் நலனுக்காக இந்த இடைஞ்சலை செய்கிறார்கள். இதை யாரிடம் முறையிட வேண்டும். அப்பிடி செய்வதால் பயனுண்டா. இதெல்லாம் யோசிக்கும்  ஏனிந்த முகநூலுடன் மல்லுக் கட்ட வேண்டும். பேசாம ஒதுங்கிக்கலாமானு யோசிக்கத் தோணுது.
 “ நண்பர்களே உங்கள் கருத்துக்களை ,ஆலோசனைகளை, பயனுள்ள தகவல்களை வரவேற்கிறேன்”,, அனபுடன் 🙏

Saturday, 1 February 2020

சரணடைந்த பின்னும்......










                      சரணடைந்த பின்னும்......



                                                     பல்லவி

                                   சரணடைந்த பின்னும் சோதித்தல் தகுமோ
                                   பரம்பொருளே ஶ்ரீராமா பவ வினைகள் களைந்தருள்வாய்

                                                     துரிதம்

                                    சுரபதி நரர்சுரர் சுகசனகாதியர்
                                    ரதிபதி சரச்வதியின் பதி துதித்திடும்
                                    அதிபதி நீயே அனைத்தும் நீயே
                                    கதியென உனையே அபயம் அபயமென

                                                   அனுபல்லவி

                                   கரதூஷணாதியரை கபந்தனை விராதனை
                                   அரக்கன் சுபாகுவை அழித்த கேசவனே
       
                                                        சரணம்

                                    மரவுரி தரித்து கானகம் சென்றவனே
                                    குரங்கரசன் சுக்ரீவன் நட்பின் காரணமாய்
                                    மரத்தின் மறைவில் நின்று வாலியைக் கொன்றவனே
                                    அரசாபம் தீர்த்தவனே ஆதவகுலத்தோனே
                                   
                                     மரவுரி தரித்து கானகம் சென்றவனே
                                     மங்கை திரௌபதியின் மானம் காத்தவனே
                                     திங்கள் திருமுகத்தோனே தீனசரண்யனே
                                     பங்கய நாபனே கோசலை மைந்தனே

                                     புரமெரித்த பரமன் சிவனும் போற்றும்
                                     ஶ்ரீரகுராமனே ரகுகுல திலகனே
                                     பரசுராமனின் கர்வம் தொலைத்தவனே
                                     பாரோர் புகழ்ந்தேத்தும் பட்டாபிராமனே

                                     சேதுக்கரையமைத்த சேதுராமனே
                                     மாது சபரிக்கு மோட்சமளித்தவனே
                                     வேதங்கள் போற்றும் கோதண்டராமனே
                                     பாதம் பதித்து நங்கை சாபம் தீர்த்தவனே

                                     சீதையின் நாயகனே சிவதனுசை முறித்தவனே
                                     தந்தை சொல் காத்த தயரதன் மைந்தனே
                                     சோமசுந்தரரும் பார்வதிக்கெடுத்துரைத்
                                     நாமங்களில் சிறந்த ராம நாமமுடையவனே